நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை பொதுத்துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
50 ஆண்டு காலத்திற்கு உரிமையை வழங்கும் இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமம் ஏற்றது.
இதன் காரணமாக இதுநாள் வரை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (ஏ.ஏ.ஐ ) விமான நிலையங்கள் தனியார் நிறுவமான அதானியின் ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் வசம் கைமாறவுள்ளது.
முதல்கட்டமாக திருவனந்தபுரம், கவுஹாத்தி, லக்னோ, மங்களூரு சர்வதேச விமான நிலையங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதற்கு கேரளா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது.
அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், மத்திய அரசின் முடிவிற்கு இடைக்கால தடையை விதித்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விமான நிலையத்தை அதானி குழுவிடம் ஒப்படைப்பதை தடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மாநில அரசு 'திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி) இணைந்து சர்வத்தேச விமான நிலையத்தின் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
விமான நிலையத்தை அதானி குழுவிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை போல, விமான நிலைய தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக நேற்று (ஆகஸ்ட்24) சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கேரள அரசு நிறைவேற்றியது கவனிக்கத்தக்கது.