இந்தியாவில் கரோனா வைரஸின் பிறப்பிடமாக கேரளா இருந்தாலும், அம்மாநிலத்தின் தொடர் நடவடிக்கைகளால் கரோனா வைரஸின் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் கணிசமாக குறைக்கப்பட்டுவருகின்றன. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த கேரளா அரசு பின்பற்றும் மருத்துவ வழிமுறைகள் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் கரோனாவின் தாக்கம் குறைந்துவருவதால் பல்வேறு மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் தளர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மிகமிக அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ரெட் ஜோனாகவும், அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு ஏ ஜோனாகவும், ஓரளவிற்கு அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு பி ஜோனாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பாதிப்புகள் இல்லாத மாவட்டங்கள் க்ரீன் ஜோனாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ரெட் ஜோனாக வகைப்படுத்தப்பட்டுள்ள காசர்கோட், குன்னூர், கோழிகோடு, மலப்புரம் மாவட்டங்களில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு ஏ ஜோனாக வகைப்படுத்தப்பட்டுள்ள பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கொல்லம் மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது வரும் ஏப்ரல் 24க்குப் பிறகு தெரியவரும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பி ஜோனாக பிரிக்கப்பட்டுள்ள திருவனந்தப்புரம், ஆலப்புழா, திருச்சூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்குப் பிறகு தளர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் க்ரீன் ஜோனாக வகைப்படுத்தப்பட்டுள்ள கோட்டயம், இடுக்கி ஆகிய இரு மாவட்டங்களில் நாளை மறுநாள் வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் ஏப்ரல் 21-இல் இருந்து இயல்பு நிலை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
கேரளாவில் இதுவரை 396 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், நேற்று ஒருநாளில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 10 பேர் குணமடைந்ததன்மூலம், அதன் மொத்த எண்ணிக்கை 255அக குறைந்துள்ளது.
இதையும் படிங்க:கோவிட் - 19 தொற்றுக்குப் பிறகான உலகம் - இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் கருத்து