கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பெய்துவரும் பலத்த மழையால், நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது முல்லை பெரியாறில் இருந்து சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு, ஒவ்வொரு கட்டமாக நீரை வெளியேற்றுமாறு கேரள அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, கேரள மாநில தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா எழுதிய கடிதத்தில்," இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், முல்லை பெரியாறின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி, 116.20 அடியாக இருந்த நீர்மட்டம், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2 மணியளவில், 131.25 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் சனிக்கிழமை(ஆக.8), ஞாயிற்றுக்கிழமை(ஆக.9) ஆகிய இரு நாள்கள் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் 257 கன அடியாக உள்ளது. வினாடிக்கு 1,650 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் முல்லைபெரியாறு அணை, தேக்கடி முறையே 19.8 செ.மீ மற்றும் 15.7 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. அதிக மழை பொழிவால், அணையின் நீர் மட்டம் ஏழு அடி உயர்ந்துள்ளது.