கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்பில் எனது பங்கு என்னவென்றால், அரசு விதிகளின்படி செயல்படுவது. நான் மேலாதிக்கத்திற்கு உரிமை கோரவில்லை. என்னைப் பொறுத்தவரை கடமைகளின் விதிகள் தெளிவாக உள்ளன.
ஒரு முதலமைச்சர் என்னை எவ்வாறு அணுக வேண்டும் என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு உத்தரவுகளையும் நிறைவேற்றுவதற்கு முன்பு என்னிடம் கருத்துகள் கேட்பதற்கு மாநில முதலமைச்சர் கடமைப்பட்டவர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அரசு, எதிர்க்கட்சி என மாற்றுக் கருத்தை வைத்திருக்கும் எவருடனும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
எல்லோரும் சுதந்திரமானவர்கள். ஆனால் கேரள அரசு சட்டப்பேரவை விதிகளை மீறுகிறது. கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தில் சகஜம்.