கொச்சி (கேரளா):ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் கேரளாவிற்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை மாநில அரசு பணி நீக்கம் செய்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கருக்கும் அவரது ஆடிட்டர் பி.வேணுகோபாலுக்கும் இடையிலான உரையாடல்கள், சிவசங்கர் அமலாக்க இயக்குநரகத்திற்கு அளித்த அறிக்கையின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்புடை வழக்கிற்காக, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான வாட்ஸ்-அப் உரையாடல்கள் அமலாக்க இயக்குனரகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் சாட்சிகளில் வேணுகோபாலும் ஒருவர்.
முன்னதாக, அமலாக்க இயக்குனரகத்தில், தனக்கு எந்த ஒரு நிதி பரிவர்த்தனை பற்றி தெரியாது என்றும், தான் எந்தவொரு நிதி பரிவர்த்தனையிலும் தலையிடவில்லை என்றும் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், இவர்கள் இருவருக்குமான உரையாடலில், நிதி பரிவர்த்தனைகள் குறித்து சிவசங்கர் அறிந்திருந்தார் என்றும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் வங்கியில் கூட்டாக லாக்கர் திறந்து, லைஃப் மிஷன் ஒப்பந்தத்தில் இருந்து பெறப்பட்ட நிதி மற்றும் கடத்தல் தங்கம் ஆகியவைகளை அதில் டெபாசிட் செய்யதனர் என்பது தெரியவந்ததுள்ளது.
இருவருக்கும் இடையேயான வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றில், சிவசங்கர், வேணுகோபாலை அமைதியாக இருக்கவும், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சர்ச்சைகளில் ஊடகங்களைத் தவிர்ப்பதற்கு, நகரத்திலிருந்து வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளார்.