கேரளா தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி தந்திரமான முறையில் சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் சுங்கத் துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலர்களுக்கு தொடர்புள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) கூறியிருந்தது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு : குற்றஞ்சாட்டப்பட்ட சரித்துக்கு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவல்
திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சரித்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய சரித், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஜூலை 6ஆம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் ஜூலை 17 அன்று என்ஐஏ நீதிமன்றத்தால் ஏழு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சரித்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த என்.ஐ.ஏ (NIA), இரண்டு முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை குறை கூறியது.