கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்திற்குக் கடந்த ஜூலை 5ஆம் தேதி ரகசிய பார்சல் ஒன்று வந்துள்ளது. பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள் 30 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் முன்பு பணியாற்றிய மக்கள் தொடர்பு அலுவலர் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசியப் புலனாய்வு முகமை (NIA - National Investigation Agency) கைது செய்துள்ளது. இந்த வழக்குத் தற்போது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் இருந்த ஸரித், இன்று(ஜூலை 17) கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஸரித்தை 7 நாள்கள் என்ஐஏவின் கீழ் காவலுக்கு அனுப்பி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.