கேரளாவின் ஐக்கிய அரசு அமீரக தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட முயன்ற விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்மந்தப்பட்ட முன்னாள் தூதரக அலுவலர் பி.எஸ். சரீத் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இந்தக் கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர். இதனிடையே சுங்கத் துறை அலுவலர்களும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் என்ஐஏ பிரிவினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரீத் ஆகிய மூவரையும் விசாரிக்க என்ஐஏ அலுவலர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை அனுமதியளித்தது.
இதனிடையே என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, சுங்கத்துறை அலுவலர்களும் இந்த வழக்கு தொடர்பாக மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ''தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரையும் அமலாக்கத் துறையினர் காவல் எடுத்து பத்து நாள்கள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் சம்மந்தப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பரிவர்த்தனை செய்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது'' என தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரீத் ஆகிய மூவரையும் அமலாக்கப் பிரிவினர் ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையும் படிங்க:தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா லாக்கரிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம், ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!