கேரள மாநிலம் மராம்பள்ளியில் அமைந்துள்ள எம்.இ.எஸ் கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ) படித்து வருபவர் ஷம்னா. இவர், 35 நாட்களுக்குள் 628 ஆன்லைன் டிப்ளோமா படிப்புகளை முடித்து சாதனை படைத்துள்ளார். குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான படிப்புகளை முடித்ததற்காக ஷம்னா இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். மகேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் 88 நாட்களில் 520 டிப்ளோமா படிப்புகளை முடித்ததே முந்தைய சாதனையாக இருந்து வந்தது.
ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திகொண்ட ஷம்னா, பல விதமான டிம்ளோமா படிப்புகள் இருப்பதை உலகறிய செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உறுதியுள்ள எவரும் எந்தவொரு பாடத்தையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்," என்றார்.
ஷம்னா தனது எம்பிஏ ஆன்லைன் வகுப்புகளுடன், டிப்ளோமா படிப்புகளையும் படித்து வந்தார். 2020 ஆகஸ்ட் 25 முதல் ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 டிப்ளோமா படிப்புகளை முடித்து வந்த ஷம்னா, 35 நாட்கள் கற்றலில், அதாவது அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் 628 படிப்புகளை முடித்தார். முதலில் எம்பிஏ படிப்பிற்கான ஆன்லைன் படிப்புகளை தொடங்கிய ஷம்னா, பின்னர் அறிவியல், கணிதம், உடல்நலம் மற்றும் பலவிதமான பாடங்களை கற்கத் தொடங்கினார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களான மிச்சிகன், யேல் மற்றும் ஜார்ஜியாவின் ஆன்லைன் டிப்ளோமா படிப்புகளை தேர்தேடுத்து படித்ததாக கூறும் ஷம்னா, இதற்கான ஆதரவு, ஊக்கத்தை ஓமானில் பணிபுரியும் அவரது தந்தை ஷெரீப், தாய், மாமனார் பாசல்-உ-ரஹ்மான் ஆகியோர் அளித்ததாக கூறினார்.