சகாவு... கேரள இடதுசாரிகள் தங்கள் சக சித்தாந்த தோழர்களை அன்போடு அழைக்கும் சொல் இது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள், காலம் செல்ல செல்ல தங்கள் பலத்தை இழந்து, இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளாவில் மட்டும்தான் தற்போது ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ளன.
இந்தியாவில் கம்யூனிச கனவை உயிர்ப்போடு நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை கொண்ட கேரள முதலமைச்சரும், அங்குள்ள மக்களால் பிரியப்பட்ட சகாவு என அழைக்கப்படும் தோழர் பினராயி விஜயன்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பிடமாகவும், கோட்டையாகக் கருதப்படும் கேரளாவில் உள்ள பினராயி என்ற ஊரில் பிறந்த விஜயன், தனது கல்லூரி காலத்திலேயே இடதுசாரி அமைப்பில் தன்னை இனைத்துக் கொண்டு தீவிர செயல்பாட்டாளராக விளங்கினார். 1970ஆம் ஆண்டு கூத்துபரம்பு என்ற தொகுதியில் வெற்றிபெற்று 26 வயதில் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார் விஜயன்.
1996ஆம் ஆண்டு மின்சாரத்துறை அமைச்சாரகப் பொறுப்பேற்ற விஜயனுக்கு, 1998ஆம் ஆண்டுதான் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. அந்தாண்டில் கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த சடையன் கோவிந்தன் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக மறைந்தார். கோவிந்தனின் மறைவுக்குப்பின் மாநில செயலாளராக பொறுப்பேற்ற விஜயன், 1998ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்தார். இதன் மூலம், அதிக ஆண்டுகள் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் விஜயன்.
2006ஆம் ஆண்டு கேரளவில் மார்க்சிஸ்ட் ஆட்சியைப் பிடித்தபோது முதலமைச்சர் பொறுப்பு பினராயி விஜயனுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால், வயதிலும் அனுபவத்திலும் மூத்த தலைவரான அச்சுதானந்தனைத் தேர்ந்தெடுத்தது கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத் தலைமையாகக் கருதப்படும் பொலிட் பீரோ எனப்படும் அரசியல் உயர்நிலைக்குழு.
2016ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இம்முறை, பொலிட் பீரோ அமைப்பு பினராயி விஜயனையே கேரளாவின் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது.