திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல்செய்தது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் ஃபரீத் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடன் மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர், ஐ.டி. செயலர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சிவசங்கரை, தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்து விசாரணை செய்துவருகிறது.அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின.
அதில், இந்தக் கடத்தலில் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், சி.எம். ரவீந்திரனுக்கும் அமலாக்கத் துறை கடந்த நவம்பர் மாதம் இரண்டு அழைப்பாணைகளை அனுப்பியது.