திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனக் கூறுவார்கள். திருமணத்தை மணமகன் - மணமகன் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பெரும் பட்டாளமே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.
ஒரு வாரத்திற்கு அப்பகுதியே திருவிழா போல்தான் காட்சியளிக்கும். அந்த அழகிய நிகழ்வு நடைபெறும் நல்ல நாளை ஜோதிடரிடமோ அல்லது பெரியவர்களிடமோ கேட்டு உறுதிசெய்வார்கள். திருமணத்திற்கான சிறிய விஷயங்களைக்கூட பார்த்துப் பார்த்து முடிவுசெய்வார்கள்.
ஆனால், கேரளாவில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோடிக்கு மூன்றாவது முறையாகத் தற்போது திருமணம் தள்ளிச் சென்றுள்ளது. ஏனென்றால் நாட்டின் தற்போதைய நிலைமை சரியில்லை. இருப்பினும் மனம் தளராமல் அடுத்த திருமண தேதியை முடிவுசெய்ய காத்திருக்கும் இந்தத் திருமண ஜோடியின் அன்பு நெகிழவைக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்ஹிபலம் (Eranhipalam) பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்சந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாண்ட்ரா சந்தோஷ் என்ற பெண்ணுக்கும் நாளை (2020 மார்ச் 22) திருமணம் நடக்கவிருந்தது.
ஆனால், கரோனா வைரஸ் தாக்கத்தால் திருமண நிகழ்ச்சிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காரணமாக திருமணம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. ஒரு தடவை திருமணம் நின்றால் சாதாரணம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த ஜோடியின் மண வாழ்க்கை இரண்டு முறை தள்ளிப்போய் தற்போது இயற்கையின் நியதியால் மூன்றாவது முறையாகவும் தடை ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.