கேரளாவில் கடந்த வருடம் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மாநிலமே முற்றிலும் பாதிப்புக்குள்ளானது. இதனால் பலரது வீடுகள், உடமைகள் உள்ளிட்டவை நீரில் அடித்து செல்லப்பட்டன. நீரில் மூழ்கி கேரளா மீண்டு வருமா என்பது கேள்விகுறியாக இருந்த நிலையில், மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில் இன்று தொடங்கி 20ஆம் தேதி வரை கேரளாவிற்கு ரெட் அலர்ட் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களிலும் 20செ.மீ. மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.