கரோனா வழிமுறைகள் குறித்த அரசின் புதிய அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா நோய்க் கிருமித் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், பாதிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில், கோவிட்-19 நோயாளிகள் தங்களது உடல்நலனை பரிசோதிப்பதற்காக கரோனா நல மையங்களுக்கு செல்ல வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அதிக காய்ச்சலுடன் உள்ள ஒரு நோயாளி வரிசையில் நிற்க வேண்டும் என ஏன் அரசு விரும்புகிறது? என கேள்வி எழுப்பினார்.
இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து அவர், டெல்லி அரசு விதிகளின்படி கரோனா நோயாளியின் உடல்நலனை பரிசோதிக்க, அவரது வீட்டுக்கு மருத்துவர் செல்கிறார் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.