ஆந்திராவிலிருந்து பிரிந்து இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உருவான தெலங்கானா இன்று தன்னை இந்தியாவின் அரிசி கிண்ணமாக மாற்றும் திட்டத்தில் உறுதியுடன் செயல்பட்டு அதை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஓரடி வைத்துள்ளது.
போச்சம்மா சாகர் திட்டத்தை தொடங்கிவைத்த கேசிஆர் இது தெலங்கானா மக்களின் நீர்த்தேவைகளைப் பூர்த்திசெய்யும் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் திட்டம். இந்தத் திட்டத்தை சிலர் பாகுபலி திட்டம் எனவும் சிலாகித்து விவரிக்கின்றனர்.
தெலங்கானாவை தனி மாநிலமாக மாற்ற அயராது பாடுபட்டு, அதில் வெற்றிகண்ட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டம்தான் தற்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் காலேஷ்வர நீரேற்று பாசனத் திட்டம்.
காலேஷ்வர நீரேற்று பாசனத் திட்டப் படம் இந்தியாவில் பாயும் பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி மகாராஷ்டிர மாநிலத்தில் உருவாகி, தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா வழியாக வங்காள விரிகுடாவுடன் ஐக்கியமாகிறது. தெலங்கானா மாநிலத்திலுள்ள காலேஷ்வரம் கிராமத்தின் வழியே ஓடும் துணை ஆறு கோதாவரியுடன் கலக்கிறது.
இந்தக் காலேஷ்வரம் பகுதியில் மிகப்பெரிய தடுப்பணைகளைக் கட்டி, தடுப்பணைகள் மூலம் மேடான பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
போச்சம்மா சாகர் திட்டப் பகுதி மெகா இன்ஜினியரிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) என்ற நிறுவனம் மாநிலத்தில் பல்நோக்கு நீரேற்று பாசனத் திட்டமான காலேஷ்வரம் திட்டத்தின் அனைத்து முக்கியமான பணிகளையும் தற்போது முடித்துள்ளது.
இதையடுத்து, இன்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், காலேஷ்வர நீரேற்று பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்ட போச்சம்மா சாகர் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இது காலேஷ்வரம் திட்டத்தின் 14ஆவது தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இங்கு ஒரு நீர்த்தேக்கமும், இரண்டு ராட்சத மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
காலேஷ்வர நீரேற்று பாசனத் திட்டம் முதல் மின் மோட்டார் 162 மெகாவாட் திறன்கொண்ட 7 கட்டமைப்புகள், 6 இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது மின் மோட்டார் 8 கட்டமைப்புகள், 6 இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 204 மெகாவாட் திறன் கொண்டவை.
135 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நீர்த்தேக்கம் 15 ஆயிரம் டிஎம்சி நீர் சேமிப்புத் திறன்கொண்டது. இது எட்டு பிரதான கால்வாய்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மின்மோட்டார்கள் ஒரு நாளைக்கு 2 டிஎம்சி நீரை மேலேற்றிவருகிறது.
காலேஷ்வரம் திட்டத்தின்கீழ் 1,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டத்திற்கும் நீர் கொண்டுசெல்லப்படுகின்றன. மேலும். மாநிலத்தின் பாகிராதா திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
மொத்தமாக இந்தத் திட்டத்தின் மூலம் தெலங்கான மாநிலத்திலுள்ள 70 விழுக்காடு மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு வந்தவண்ணம் இருந்தபோதிலும் மின்சாரத் தேவை, கால்வாய் மூலம் நீர் கொண்டுசெல்லும் தூரம், மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெறாமல் திட்டங்களை நிறைவேற்றுவது எனப் பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
எது எப்படி இருப்பினும், தனது மாநிலத்தின் வருங்கால தேவைகளையும், அத்தியாவசிய தேவைகளையும் அறிந்து நாடு உற்றுநோக்கும் ஒரு முக்கியத் திட்டத்தை இன்று தொடங்கிவைத்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்!
இதையும் படிங்க:உலகின் மிகப்பெரிய காலேஷ்வரம் பாசனத் திட்டம் !