அரசியலமைப்பு சட்டம் 370 மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மத்திய அரசு சட்டத்தை நீக்கி மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையொட்டி, ஜம்மு, காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையிலும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி வீட்டுக் காவலிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தார். 14 மாதத்திற்கு பிறகு அவரை அக்டோபர் 13ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் அரசு விடுவித்தது.
இந்நிலையில், மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி "மக்கள் கூட்டணிக்கான குப்கர் ஒப்பந்தம்" என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, ஐந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து குப்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.