கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் ராஜஸ்தானிலுள்ள ஜெய்சால்மார் தடுப்பு தனிமைப்படுத்துதல் முகாமில் காஷ்மீர் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அதிகளவு நெருக்கடிகளை சந்தித்துவருவதாகவும், அக்கறையின்மை காரணமாக கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவர் அன்சாப் நஃபி நமது ஈடிவி பாரத்திடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், “அக்கறையின்மை காரணமாக ஒவ்வொரு நாளிலும் ஜெய்சால்மர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் நான் அமைதியற்றவனாக உணர்கிறேன்.
நாங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டோம். தற்போது அது 20 நாட்களுக்கு மேல் நீள்கிறது. யாரும் எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை, நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பது தெரிகிறது. எனினும் தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் அலுவலர்கள் வெவ்வேறு நபர்களை இணைப்பதால் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது.
இங்கு மாணவர்கள் மட்டுமல்ல. ஈரானின் கோம் நகரிலிருந்து யாத்ரீகர்களும் உள்ளனர். அவர்களில் சிலருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் சாப்பிடுகின்றனர். கை கழுவ இரண்டே இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் 250 க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் வீட்டிற்கு செல்ல காத்திருக்கிறார்கள். ராஜஸ்தான் அரசாங்க தரவுகளின்படி, ஜெய்சால்மர் தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் சுமார் 170 காஷ்மீரிகள் உள்ளனர். அவர்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஈரானிலிருந்து திரும்பி வந்தவர்கள்.
மார்ச் 14ஆம் தேதிக்கு பிறகு சுமார் 300 மாணவர்களை இந்திய அரசு நாட்டிலிருந்து வெளியேற்றியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டவர்கள் மருத்துவ மேற்பார்வையில் ஜெய்சால்மரில் உள்ள ஒரு ராணுவ ஆரோக்கிய மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
உலகளவில் கரோனா வைரஸுக்கு பிறகு, ஈரான் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக மாறியது, இந்த நோயால் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஈரானிலிருந்து தப்பியவர்கள் வெவ்வேறு இடர் குழுக்களின் கலவையால் இந்த வசதிகளில் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
இந்நிலையில், “நாங்கள் மார்ச் 14 அன்று ஈரானிலிருந்து ஜெய்சால்மருக்கு அழைத்துச் வரப்பட்டோம். யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்களைப் பிரிக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டோம்.
எங்களை தனித்தனியாக தனிமைப்படுத்துமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை” என்று ஈரானிலிருந்து திரும்பிய மற்றொரு மருத்துவ மாணவர் அப்துல் ரூஃப் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
மேலும், “மகாராஷ்டிராவைச் சேர்ந்த குறைந்தது ஆறு பேருக்கு இங்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இங்கு புதிய புதிய விதிகளை விதிக்கிறார்கள். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது எப்போது எங்களால் காஷ்மீருக்கு திரும்ப முடியும் என்பதே” என்றார்
இது குறித்து ஈடிவி பாரத், ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்திடம் தொடர்புக் கொண்டது. அப்போது, “நாடு தழுவிய லாக் டவுன் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது” என அலுவலர்கள் பதிலளித்தனர். மேலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதையும் அவர்கள் நினைவுப்படுத்தினர்.
இது தொடர்பாக மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் பொறுகை காக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்த முயற்சியை எடுத்துவருகிறோம். ஆகவே இன்னும் சில காலம் மாநில நிர்வாகத்துடன் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். நிர்வாகம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துவருகிறது” என்றார்.
எவ்வாறாயினும் கரோனா (கோவிட்19) பீதியில் ஈரானிலிருந்து திரும்பிய நிலையில் சொந்த நாட்டில் அகதிகள் போல் சிக்கி வைரஸ் பீதிக்கு மத்தியில் ஜெய்சால்மர் தடுப்பு முகாமிலுள்ள காஷ்மீர் மாணவர்கள் நாட்களை கடத்துகின்றனர்.