சச்சரவு என்பது அரசியல் வடிவிலோ அல்லது வேறு எந்த வடிவில் வந்தாலும் அது சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதிக்கும். தொடர் சச்சரவுகளைச் சந்திக்கும் சமூகத்தில் நம்பிக்கையின்மை என்பது தீவிரமாக இருக்கும். அது மிகவும் சிறிய அளவிலான சிக்கலைக்கூட பெரும் பாதிப்பாக மாற்றிவிடும்.
இந்தச் சச்சரவு, சிக்கல்கள் சமூகத்தின் முக்கிய அங்கங்களான சமூக மதிப்பீடுகள், பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் இத்தகைய நம்பிக்கையின்மையைத்தான் காஷ்மீர் சந்திக்கிறது. அதுவும், மாநிலம் பெரிய அளவிலான வாழ்வா, சாவா சிக்கலைச் சந்திக்கும் வேளையில் தீவிர கட்டுப்பாடுகள் காஷ்மீரில் வசிக்கும் 60 லட்சம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் கடும் ஊரடங்கு விதிக்கப்பட்டு, அங்கு 5 கிலோமீட்டர் வரை தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் சாலைத் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறவும், உள்நுழையவும் சீல்வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்தத் தீவிர நடவடிக்கைகள் குறித்து அறிவுஜீவிகள் பலர் விமர்சன கருத்துகளை முன்வைத்தாலும் இது பெரும்பாலான மக்களின் நலன் பாதுகாக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.
காஷ்மீரில் சிறப்புத் தகுதி நீக்கத்திற்குப்பின் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போதைய கரோனா ஊரடங்கு நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒடுக்குமுறை குறித்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
தற்போதைய சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் இதற்கு முன்னர் அரசியல் காரணங்களால் ராணுவ நடவடிக்கைகளுக்குள்படுத்தப்பட்டு, அங்கு வன்முறை போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதி அரசு ஏற்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் பகுதியாகவே இருந்துவந்துள்ளது. அங்கு எல்.இ.டி. விளக்குகள் விநியோகம் செய்யப்படும்போது அதன்மூலம் தங்களை உளவு பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்து மக்கள் தங்கள் எல்.இ.டி. விளக்குகளை தெருக்களில் தூக்கி எறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.