ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது குளிர் குறைந்து மிதமான சீதோஷண நிலை நிலவத் தொடங்கியுள்ளதால், காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்கு முன் ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை. நீண்ட காலத்திற்கு அசாதாரண சூழல் நிலவி வந்ததால் இயல்பு வாழ்க்கை தடைபட்டது. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு படிப்படியாகவே தடைகள் தளர்க்கப்பட்டன. அக்டோபர் மாதத்தில் மாணவர்கள் மெல்ல மெல்ல வரத் தொடங்கினர்.
அதன்பின்னர் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் காரணமாக பள்ளிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. பனிக்காலம் நிறைவடைந்து குளிர் குறையத் தொடங்கியதையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் என காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் யூனிஸ் மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பள்ளிகள் இயக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையே நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகர் பகுதியில் பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மற்றப் பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலும் இயக்கப்படவுள்ளன. பள்ளிகளுக்குச் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கொரோனாவால் வந்த கொடுமை' - நெசவாளர்களின் குமுறல்