ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தம்பதியினரை டெல்லி சிறப்பு பிரிவு காவல் துறையினர் மார்ச் 8ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் ஜஹன்சயிப் ஷமி, ஹீனா பஷீர் பெய்க் என தெரியவந்தது. காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பயங்கரவாத செயல்களில் ஈடுபட அங்கிருந்து டெல்லிக்கு சென்றதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப்பைச் சேர்ந்த தனது கணவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்ததாகவும் ஜஎஸ் அமைப்பில் சேர்வதற்காக தனது வேலையை அவர் ராஜினாமா செய்ததாகவும் ஹீனா பஷீர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "இலங்கையில் மேற்கொண்ட தாக்குதல் போன்று நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ள அந்தத் தம்பதியினர் திட்டமிட்டனர். ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக காஷ்மீர் இளைஞர்களை ஹீனாதான் முதலில் அணுகியுள்ளார். பின்னர், ஷமியிடம் அறிமுகம் செய்துள்ளார்" என்றார்.
தம்பதியினரின் பயங்கரவாத செயல்களை புலனாய்வு முகமை நோட்டமிட்டதாகவும், தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை புலனாய்வு முகமை டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமித் ஷா, நட்டாவுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை