கோவிட்-19 வைரஸ் தாக்குதலினால் மோசமான அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாநிலம் கேரளம். அந்த மாநிலத்தில் அதிக அளவு வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் காசர்கோடு மாவட்டம் இருந்தது.
தற்போது அந்த மாவட்டம் கரோனா பிடியிலிருந்து படிப்படியாக மீண்டு நாட்டுக்கு முன்னோடி ஆகி வருகிறது. இங்கு கடந்த மூன்று நாள்களில், 37 விழுக்காடு பேர் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
நாடு முழுக்க கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 11.4 விழுக்காடு ஆக உள்ளது. ஒட்டுமொத்த நாட்டிலும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் இடமாக காசர்கோடு அரசு மருத்துவமனை உள்ளது.
இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் கரோனா வைரஸிலிருந்து முழுமையாக மீண்டு 26 பேர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து கவனித்துக்கொண்ட சுகாதார ஊழியர்கள் கைதட்டல்களுக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் அனுப்பி வைத்தனர்.
கேரளாவில் வைரஸ் பரவலின் இரண்டாம் கட்டத்தில், 165 நபர்கள் கோவிட்-19 பெருந்நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த 165 பேரில் 60 பேர் குணமாகி, மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர். மீதமுள்ள 105 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதிக பாதிப்பாளர்கள் குணமடைவது நாட்டிலேயே இங்குதான் நடந்துள்ளது. மேலும் தொடர்ந்து 17 நாள்களாக மாவட்டத்தில் கோவிட்-19 பாதிப்புகள் பதிவான நிலையில் இன்று மாவட்டத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
இருந்த போதிலும் சுகாதார ஊழியர்கள் கடுமையாக பணிபுரிந்துவருகின்றனர். அந்த வகையில் கரோனா நோயாளிகள் அதிகம் குணமடைந்தவர்கள் பட்டியலில் காசர்கோடு மாவட்டம் நாட்டுக்கே முன்மாதிரி ஆகியுள்ளது.