கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகள் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக இதுவரை 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். கலவரத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கலிம் பாட்ஷா ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கலவரத்தை பயன்படுத்தி பாட்ஷா துப்பாக்கியை வைத்து சுட்டதும் தாக்குதல் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. கலவரத்திற்கு முக்கிய காரணமான, ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மாநிலத்தின் மூத்த அலுவலர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில், கலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், கலவரத்தில் பொது சொத்துகள் பெரும் சேதமடைந்தன எனவும், சேதமான பொருள்களின் மதிப்பை கணக்கிட ஆணையரை நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர், மூத்த அலுவலர்களிடையே கேட்டறிந்தார். டிஜே ஹல்லி, கேஜி ஹல்லி காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 18) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.