கர்நாடக மாநிலத்தில் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “கிராமப்புறங்களில் தொழில்களைத் தொடங்குவதைப் பொறுத்தவரை, மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து ஒரு குறிப்பிட்ட திட்டம் உள்ளது.
அந்த வகையில் முதல்கட்டமாக அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பொருள்களின் உற்பத்தி பொருள்கள் ஆகியவை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய தொழில்களும் தொடங்கப்பட்டுள்ளன.
மாநிலத்தைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு பகுதிகள், சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், மஞ்சள் மண்டலம் மற்றும் பசுமை மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளோம்.
பசுமை மண்டலப் பகுதிகளில் வணிக வளாகங்கள் (மால்கள்), உணவகங்கள், பார்கள் மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் (பப்கள்) தவிர அனைத்து கடைகளையும் திறக்கலாம். இதேபோல் மஞ்சள் மண்டலப் பகுதிகளிலும் சில கடைகள் திறக்கப்படும். ஆரஞ்சு மண்டலங்களில் எந்தக் கடைகளைத் திறக்க வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் வழிமுறைகளை அளிப்பார்கள். சிவப்பு மண்டலங்களில் முந்தைய கட்டுப்பாடுகள் தொடரும். அத்தியாவசிய தொழில்கள் மட்டுமே தொடங்கப்படும்.
சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க நாங்கள் வழிகாட்டுகிறோம். 50 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: உலகில் 31 லட்சம் பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு!