ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு முன்பு கலை, இலக்கியம், சமூக சேவை, கல்வி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகளை அறிவிப்பது வழக்கம். 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கம் இப்போது வரை நடைமுறையிலுள்ளது.
நான்கு விருதுகளை உள்ளடக்கிய இந்தபத்ம விருதுகளில் பாரத ரத்னா விருது, நாட்டின் மிக மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்தடுத்த நிலைகளில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன.
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை அதற்கு முந்தைய நாள்அரசு வெளியிட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட ஏழு பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இதுதவிர்த்து 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன. 118 பேரில் ஒருவர்தான் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா. ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி சேவை ஆற்றியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது இந்திய அரசு. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே அவருக்குத் தெரியாமல் இருந்துள்ளது.
இது தொடர்பாக ஐஎஃப்எஸ் அதிகாரியான பர்வீன் கஸ்வான் வெளியிட்டிருந்த ட்விட்டில், “ஹரேகலா ஹஜப்பாவுக்கு தனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதே தெரியாது. ரேஷன் கடையில் பொருள்களை வாங்குவதற்காக அவர் வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது, அதிகாரிகள் அவரிடம் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கூறியுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த இந்தப் பழ வியாபாரி தனது கிராமமான நியூபதாபுவில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கிவருகிறார்” என்று குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, அனைவரின் கவனத்துக்கும் சென்றார் ஹரேகலா ஹஜப்பா.
கல்வி சேவை புரிய தூண்டுதலாக இருந்த ஹஜப்பா எதிர்கொண்ட அவமானம்:
ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி சேவை அளிப்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது பழம் விற்கும்போது அவர் பட்ட அவமானம் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள். ஆம், அவர் ஒரு நாள் சாலையோரத்தில் கூடையில் ஆரஞ்சு பழம் விற்றுக்கொண்டிருந்தபோது, இரு வெளிநாட்டவர்கள் அவரிடம் ஆங்கிலத்தில் பழத்தின் விலை குறித்து கேட்டுள்ளார்கள்.
ஆனால், ஹஜப்பாவுக்கோ அவர்கள் பேசும் மொழி புரியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளார். அவரிடம் மேற்கொண்டு உரையாடல் நிகழ்த்த முடியாது என்ற எண்ணத்தில் அந்த இரு வெளிநாட்டு நபர்களும் பழங்களை வாங்காமல் அங்கிருந்து கடந்து சென்றுள்ளனர். ஹஜப்பாவை உறங்கவிடாமல் செய்த இந்நிகழ்வு அவரை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
ஹஜப்பாவின் வேட்கையும் தளராத மன உறுதியும்:
தான் சாதாரண பழ வியாபாரி என்பதை உணர்ந்த அவர், கிராம நிர்வாகத்திடமும் ஊர்மக்களிடம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். ஹஜப்பாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத அவர்கள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை ஹஜப்பாவின் மனதை விட்டு அகன்றபோதிலும் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி வழங்கியே தீர வேண்டும் என்ற வேட்கை மட்டும் அவர் மனதிலிருந்து அகன்றுவிடவில்லை.
அந்த வேட்கையையும் மனஉறுதியையும் கொண்டு வருமானத்தின் பெரும்பகுதியை சேமித்துக்கொண்டே வந்தார். அவரின் ஓர் நாள் வருமானம் 150 ரூபாய்தான். இவரின் இச்செயலைக் கண்டு மனமிறங்கிய பொதுமக்களும் தங்களால் இயன்ற தொகையை அவரிடம் அளித்தனர். இதனால் பள்ளிக்கூடம் திறந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர் மனதில் துளிர்விட்டது. சேமித்த பணம் தவிர்த்து வங்கியில் கடன் பெற்று மதராஸா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) என்ற பள்ளியை வெற்றிகரமாகத் திறந்தார் ஹஜப்பா.
ஆரம்பத்தில் 28 குழந்தைகளைக் கொண்டு இயங்கிய மதராஸா, அதன்பின் குழந்தைகளின் வரத்தால் தற்போது சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இப்போதும் பழ வியாபாரம் விற்றுக்கொண்டிருக்கும் ஹஜப்பா அதனைச் சேமித்து ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி சேவை செய்துவருகிறார். குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மதராஸாவையும் அதற்கேற்றவாறு மேம்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் ஹஜப்பா.
தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஹஜப்பா கூறிய சில வார்த்தைகள் மிக முக்கியமானவை. ”ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு தகவல்தொடர்பு (Communication) மிக அவசியம் என்பதை உணர்ந்து, குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்கள் கல்வி பயில என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்” என்கிறார் ஹஜப்பா.
கனவா? நனவா?
ஹஜப்பாவின் இந்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்த அரசை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் தொலைபேசியில் ஹஜப்பாவை தொடர்புகொண்டு அவரிடம் பேசியுள்ளனர்.
அப்போது அவர்கள் இந்தியில் பேசியதால் ஹஜப்பாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் பேசியதை காவலர் ஒருவர் மொழிபெயர்த்து கூறியிருக்கிறார். அப்போதுதான் ஹஜப்பாவிற்கு, தாம் பத்மஸ்ரீ விருது பெற்றதே தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சி மிகுதியில் பேசிய ஹஜப்பா, ”எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது கனவா? நனவா? என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எனக்கு ஆத்ம சந்தோஷாமாக உள்ளது” என்று கூறினார்.
நன்மை கடலின் பெரிது:
”பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”
என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ஏற்றவாறு செயல்பட்டு தன்னால் முடிந்த உதவியை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் ஹஜப்பா செய்த உதவி கடலினும் பெரிதாகக் கருதி அரசு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது நமக்கும் மகிழ்ச்சியவே அளிக்கிறது!