அரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், சுத்தமில்லாத கழிவறைகள், ஓடாத மின்விசிறி என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இரண்டு முறை மத்திய அரசு விருது பெற்று கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.
மத்திய கல்வித் துறை அமைச்சகம், அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது வழங்கிக் கௌரவித்துவருகிறது. அத்திட்டத்தின்கீழ் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பேட் அரசுத் தொடக்கப்பள்ளி இரண்டு முறை பரிசு பெற்று தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு ஜொலித்துவருகிறது.
கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியின் இந்நிலைக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே காரணம் என்கின்றனர் அப்பகுதியினர். 2015ஆம் ஆண்டு, தனது 30ஆவது வயதில் இளம் தலைமை ஆசிரியராக கோட்டுச்சேரி பேட் அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார் எஸ். விஜயராகவன்.
காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி குறித்த செய்தித்தொகுப்பு வர்ணம் பூசப்பட்ட கட்டடம், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பார்ப்பவர்கள் சற்று முகம் சுளிக்கும் பள்ளியாகக் காட்சியளித்த கோட்டுச்சேரி பேட் அரசுத் தொடக்கப்பள்ளி எஸ். விஜயராகவன் பொறுப்பேற்ற பின்பு ஒரு மாற்றத்தைச் சந்தித்தது.
அரசுப் பள்ளியில் கல்வி, சுகாதாரம் என அனைத்தும் தரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல பெற்றோர்கள் தங்களின் வருமானத்தையும் மீறி தனியார் பள்ளிகளை நாடிச்செல்வதால் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டுவரும் சராசரி அரசுப் பள்ளிகளில் இந்தப் பள்ளியும் விதிவிலக்கல்ல.
தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் இதனை உணர்ந்த விஜயராகவன் தன் பள்ளியை தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு உயர்த்த நினைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
முதல் முயற்சியாக பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் பொருள் உதவியோ, நிதி உதவியோ கேட்காமல், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்காக ஒருநாள் 'உழைப்பு தானம்' செய்யுங்கள் எனக் கேட்டுள்ளார்.
அதனை முழு மனதோடு ஏற்றப் பெற்றோர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கட்டட வேலை, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், பெயிண்டிங், மர வேலைகள் என அனைத்தையும் ஆர்வத்துடன் செய்து ஒரேநாளில் பள்ளியின் தேவைகளைப் பூர்த்திசெய்துள்ளனர். அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம் என்ற குற்றச்சாட்டைப் போக்கும்விதமாக தான் பெறும் ஊதியத்தில் பெரும் பங்கை பள்ளியின் வளர்ச்சிக்காகவே செலவிட்டுவருகிறார் விஜயராகவன்.
மாணவர்கள் தாகம் தணிக்கச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குப்பைகளற்ற சுற்றுச்சூழல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும் கழிவறைகள், வகுப்புகள் எடுப்பதற்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி, குழந்தைகள் உணவு உட்கொள்ள டைனிங் ஹால் வசதி, ஏசி, கணினி ஆய்வக வசதி, இயற்கை உரம் கொண்ட மூலிகைத் தோட்டம், நெகிழி மறுசுழற்சி பயன்பாடு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி எனப் பல நவீன வசதிகளோடு நடைபோடத் தொடங்கியது கோட்டுச்சேரி பேட் அரசுத் தொடக்கப்பள்ளி.
பள்ளியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டம் தற்போது, தனியார் பள்ளிகளைப் போன்று பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி, சிபிஎஸ்இ மத்திய அரசு கல்வித் திட்டம் மாணவர்களை அழைத்துவர வாகனங்கள், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்திலிருந்து உதிரும் இலைகளைச் சேகரித்து இயற்கை உரம் தயாரித்து அதனைக் கொண்டு பள்ளியில் மூலிகைத் தோட்டம் என மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவருகிறது.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி சோலார் மூலம் மின்சார உற்பத்தி என ஒவ்வொன்றையும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்வடிவம் கொடுத்துவரும் விஜயராகவன், தன் பள்ளிக்கு பல்வேறு தரப்பிலிருந்து 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார். மத்திய அரசின் 'சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருதை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இப்பள்ளி பெற்றுவருகிறது.
"நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கும் முன் 86ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை விருது பெற்றபிறகு தற்போது 254-க்கும் மேல் உயர்ந்துள்ளது. விரைவில் இது 500ஐ கடக்கும். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்கிறார் பொது நிதி திரட்டி, சுயநிதி சேர்த்து மாணவர்களின் நலனுக்காக உழைக்கும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.விஜயராகவன்.
இதுபோன்று ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மாறினால், தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறைந்து கல்வி வியாபாரமாவதைத் தவிர்க்கலாம். தினம் தினம் புது புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுபவரே சிறந்த ஆசிரியர் என்பார்கள். அந்த வகையில், புதிய விஷயங்களைக் கற்று, புதுமை படைத்து வரும் விஜயராகவன் தலைசிறந்த தலைமை ஆசிரியர்தான்.
இதையும் படிங்க:தாய்மொழியை ஊட்டிய தமிழாசிரியருக்கு மனை கட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள்...!