காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து 23 மூத்தத் தலைவர்கள் கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் செயற்குழுக் கூட்டம், இன்று காலை காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியதும், சோனியா காந்தி தனக்கு தலைவர் பதவியில் தொடர்வதில் விருப்பமில்லை என்றார். இருப்பினும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி கட்சித் தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோவல கே.சி. வேணுகோபால், ஏ.கே. அந்தோணி உள்ளிட்ட தலைவர்களும் சோனியா காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் அரசியல் குழப்பம் எழுந்திருந்தபோது தலைமை குறித்து கடிதம் எழுதாமல், அவர் (சோனியா காந்தி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்தக் கடிதம் எழுதப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கட்சி பிரச்னைகளை பொதுவெளிக்குத் தலைவர்கள் எடுத்துச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 'உள்கட்சி பிரச்னைகளை செயற்குழுக் கூட்டத்தில்தான் விவாதிக்க வேண்டுமே தவிர, ஊடகங்களில் அல்ல' என்றார். மூத்தத் தலைவர்கள் கடிதம் எழுதியதன் பின்னணியில் பாஜக இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டையும் ராகுல் காந்தி முன்வைத்தார்.