உத்தரப் பிரதேச மாநிலம் கார்சியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். இவரது ஒரு வயது குழந்தைக்கு ஜனவரி 30ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாட முடிவெடுத்துள்ளார். அதனால் வீட்டில் அருகில் வசிப்பவர்களைப் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 20 குழந்தைகளும் சில பெண்களும் சுபாஷ் பாதமின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவ்வாறு வந்தவர்களை சுபாஷ் பாதாம் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், குழந்தைகளின் பெற்றோரிடம் குழந்தைகளை விடுவிக்க வேண்டுமென்றால் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் உள்ளார். இதனால் பதற்றமடைந்த அனைவரும் காவல் துறையினரிடம் புகாரளித்தனர்.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து அங்கு காவலர்கள் பலர் குவிக்கப்பட்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்டபோது காவலர்கள் மீது சுபாஷ் பாதம் கையெறி குண்டுகளை வீசியுள்ளார். மேலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தியுள்ளார். கடும் போராட்டத்திற்குப் பின், சுபாஷ் பாதமை சுட்டு வீழ்த்தி அங்கிருந்த குழந்தைகளையும் பெண்களையும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.