உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான சிறுவர்கள் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தங்கியுள்ள 57 சிறுமிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கர்ப்பம் தரித்திருப்பது கூடுதல் வேதனை. இந்தத் தொற்று பாதிப்புக்கான காரணங்கள் தற்போதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை.
போக்சோ வழக்கில் தொடர்புடைய இந்த ஐந்து கர்ப்பிணி சிறுமிகளும் காப்பகத்திற்குள் வரும்பொழுதே கர்ப்பம் தரித்திருந்ததாகவும், தொற்று பாதிப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கான்பூர் மாவட்ட நீதிபதி பிரம்ம தேவ்ராம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்தக் காப்பகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காப்பகங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகவும், விசாரணை நடைபெற்று வருகிறது என்ற போர்வைக்குள் இந்த விவகாரங்கள் மறைக்கப்படுவதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரப் பிரதேச அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சிறுமிகளின் கர்ப்பத்திற்கு அரசு அலுவலர்கள் காரணமாக இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.