கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன், 2012ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணி எனப்படும் ஐஏஎஸ் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார். டையூ டாமன் யூனியன் பிரதேசத்தில் மின் துறை செயலராக பணியாற்றிவந்த இவர், மத்திய அரசின் மீதான அதிருப்தி காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களின் சுதந்திரத்தின் மீதான கவலையில் தன் பணியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹைராபாத்தில் உள்ள லமாகான் என்ற கலாசார அமைப்பு நடத்திய கருத்தரங்கு கூட்டத்தில் பங்கேற்ற கண்ணன் கோபிநாதன், 'நான் ஏன் ராஜினாமா செய்தேன்?' என்ற தலைப்பில் கருத்துச் சுதந்திரம், காஷ்மீர் விவகாரம் ஆகியவை தொடர்பாகப் பேசினார்.
அப்போது, "ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பின்னர், அம்மாநில மக்கள் தங்களது கருத்து, கோபத்தை வெளிப்படுத்தக்கூட விடாமல் செய்துள்ளது. இது அவர்களின் பேச்சுரிமையையும் கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும் நடவடிக்கையாகும். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்தே நான் என் பணியை ராஜினாமா செய்தேன்" என்றார்