கடந்த சில மாதங்களாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிவருகிறார். இவரின் சர்ச்சை கருத்துகளுக்குப் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சமூக வலைதளத்தில் பதிவுசெய்த கருத்துகள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்த்ரா நீதிமன்றத்தில் அஷ்ரப் அலி சயத் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கங்கனா, அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டியது, மத உணர்வுகளை வேண்டும் என்றே புண்படுத்தியது, தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் மீதும் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக அக்டேபர் 26, 27ஆம் தேதி, நவம்பர் 10ஆம் தேதி என இரு முறை கங்கனாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது, உறவினரின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என கங்கனா தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று (நவ. 23) விசாரணைக்கு நேரில் ஆஜராக நவம்பர் 18ஆம் தேதி மும்பை காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். ஆனால், இன்றும் கங்கனாவும், அவரது சகோதரியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், தன் மீதும், தனது சகோதரி மீதும் பதிவுசெய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்துசெய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்தபோது, இந்த வழக்கில், முன்பிணை பெற அவர் உயர் நீதிமன்றத்தை நாடக்கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரூபா காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக காயப்படுத்திவிடுகிறார் - கங்கனா