புதுச்சேரியில் கர்மவீரர் காமராஜர் சிறப்பை விளக்கும் விதமாக அரசு பல நலத் திட்டங்களுக்கு அவரது பெயரை வைத்து சிறப்பித்து வருகிறது. இதனிடையே, காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட அரசு முடிவு செய்து, இதற்காக கருவாடிகுப்பம் சித்தானந்த கோயில் அருகே 3.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளும் தொடங்கியன.
பின்னர் 2009ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ரங்கசாமி பதவி விலகியதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் முதலமைச்சராக அமர்ந்தார். அப்போது, மணிமண்டபம் கட்டும் பணி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு மீண்டும் ரங்கசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதைய சூழலில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் மணிமண்டபம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
எடுத்த பணியை முடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, 2014ஆம் ஆண்டு மறு உருவாக்கமாக 24 கோடி ரூபாய் ஹாட்கோ கடனுதவி பெற்று மீண்டும் காமரஜார் மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டாம் கட்டமாக அடிக்கல் நாட்டினார். இந்த முறை சிறிய மாற்றத்துடன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இங்கு 130 பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம், ஒரே நேரத்தில் 150 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நூலகம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. துரிதமாக நடைபெற்று வந்த பணி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டுமான பணிகளில் சுனக்கம் ஏற்பட்டது. மணிமண்டபம் கட்டத் தொடங்கி 13 ஆண்டுகளை கடந்துவிட்டன. ஆட்சியாளர்கள் மாறி, மாறி அரியணைக்கு வந்தாலும் காமராஜர் மணிமண்டபம் கட்டி முடிந்த பாடில்லை.