குஜராத் மாநிலத்தில் புயல் மற்றும் பயங்கர மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சருமான கமல்நாத், மோடி ஜி, நீங்கள் குஜராத்திற்கு மட்டும் பிரதமர் இல்லை என தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளாார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, மோடி ஜி, நீங்கள் இந்த நாட்டுக்கு பிரதமர். குஜராத்திற்கு மட்டும் பிரதமர் இல்லை. மத்திய பிரதேசத்தில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் மின்னலில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உங்கள் அனுதாபங்கள் முழுவதும் குஜராத்திற்கு மட்டும்தான் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மத்தியபிரதேசத்தில் 16 பேரும், ராஜஸ்தானில் ஆறு பேரும், குஜராத்தில் ஒன்பது பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.