மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து கமல்நாத் இன்று ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் கமல்நாத் சமர்ப்பித்தார்.
முதலமைச்சர் கமல்நாத், மூத்த தலைவர் திக்விஜய சிங் மீதான அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகியதையடுத்து, அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
இவர்களில், அமைச்சரவையில் பங்குபெற்றிருந்த ஆறு அமைச்சர்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர், மீதமுள்ள 16 உறுப்பினர்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தார். அதிருப்தி உறுப்பினர்களைச் சமாதானம் செய்ய திக்விஜய சிங் பெங்களூரு சென்ற நிலையில், அங்கு அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று மாலைக்குள் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஆட்சி கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியானது. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்துள்ளார்.
இந்தச் செயல் பாஜகவின் சதி திட்டம், சிந்தியாவும் பாஜகவும் இணைந்து காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் திட்டத்தை மேற்கொண்டதாக தனது செய்தியாளர் சந்திப்பில் கமல்நாத் குற்றஞ்சாட்டினார். மேலும், உண்மை வெளியே வரும்போது பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச முதலமைச்சராக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் மோடி: சிவசேனா விமர்சனம்!