இந்தியத் தலைநகரும், யூனியன் பிரதேசங்களில் ஒன்றுமான டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை 11ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி, அம்மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் களத்தில் போட்டா போட்டி போடுகின்றன. இந்தமுறை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறது.
அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பலவற்றைக் கையிலெடுத்து ஆம் ஆத்மியும் பரப்புரை மேற்கொண்டுவருகிறது.
ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகளும் வெளியாகி பாஜகவுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ஒரு சாதனையாளரையும், அவரின் நெறிமுறைகளையும், வலிமையையும் பின்பற்ற வேண்டியது அவசியம். இந்தத் தலைவரை மட்டும் பின்தொடராதீர்கள், இந்த நபரையும்' என்று அவர் மீதான நட்பை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
தனி மனிதராக இருந்து பல நற்பண்புகளைக் கொண்டுள்ள இவர் போன்ற ஒரு நபரின் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற விதத்திலும் அவர் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க...
மகாத்மா காந்தி நினைவுநாள்: ராஜ்கோட் நினைவிடத்தில் மத நல்லிணக்கப் பிரார்த்தனை