மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழும் அபாயம் உருவாகியுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து, 22 காங்கிரஸ் எம்ஏல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்கள், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாக சொகுசு விடுதியில் தங்கியுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறு மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் அம்மாநில ஆளுநர் லால்ஜீ டான்டனிடம் வலியுறுத்தியுள்ளார்.
வெளிமாநிலப் பயணத்தை முடித்துவிட்டு ஆளுநர் மத்தியப் பிரதேசம் திரும்பிய நிலையில், அவரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த கமல்நாத், கடிதம் மூலமும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளது எனவும், அதேவேளை எம்எல்ஏக்களை விடுவித்து சுதந்திரமாக வாக்களிக்க ஆளுநர் வழிவகை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியப் பிரதேச அரசியலிலும் கொரோனா நோய் நுழைந்துவிட்டதாக கமல்நாத் பாஜகவை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க:உன்னாவ் பாலியல் வழக்கு: முன்னாள் பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு சிறை!