மத்தியப் பிரதேச எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் நிரப்பப்படாமல் இருக்கும் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு பிரதான கட்சிகளும் நேருக்கு நேர் களம் காணும் இந்த இடைத்தேர்தல் பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில், குவாலியர் மாவட்டம் டாப்ரா (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ம.பி. முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கமல்நாத் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எளிமையானவர். ஆனால், எதிர்த்துப் போட்டியிடுபவர் (இமரதி தேவி) ஒரு... என இழிவான சொல்லை பிரயோகப்படுத்தினார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல்நாத்தின் இந்தப் பேச்சு கடும் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது.
கமல்நாத்தின் அருவருக்கத்தக்க இந்தப் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கமல்நாத்தின் பேச்சைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று அம்மாநிலம் முழுவதும் 2 மணி நேர மௌனப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் இமர்தி தேவியை அவதூறாகப் பேசியது தொடர்பாக கமல்நாத் மீது வழக்குப் பதிந்த தேர்தல் ஆணையம் 2 நாள்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று மூத்த வழக்குரைஞர் விவேக் தங்கா, கமல்நாத் சார்பாக தேர்தல் ஆணையத்தில் பதிலை சமர்ப்பித்துள்ளார்.
அதில், "என்னுடைய பரப்புரையில் கமல்நாத் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. தேர்தல் தோல்வி பயத்தில் முக்கியமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பாஜக தனது உரையை தவறாகச் சித்திரித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக எவ்வித தவறும் செய்யாமல், தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்துவருகிறேன். இந்தப் பேச்சுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.
நான் எந்தத் தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. நான் உபயோகித்த அந்தச் சொல் நாடாளுமன்ற உரையில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண சொல்" எனப் பதிலளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த இமரதி தேவி அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.