மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. அம்மாநில முதலமைச்சராக மூத்த தலைவர் கமல்நாத் பதவி வகித்துவரும் நிலையில், அம்மாநிலத்தின் இளைஞர் முகமாக ஜோதிராத்தியா சிந்தியா உருவெடுத்துவருகிறார். இவரின் வளர்ச்சி காரணமாக கமல்நாத்திற்கும் அவருக்கும் நெருடல் ஏற்பட்டுள்ளதாக சில மாதங்களாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த சிக்கலைக் காங்கிரஸ் மேலிடம் கண்டும் காணாமல் இருந்துவருவதால் சிந்தியா கடும் அதிருப்தியில் உள்ளதாகச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதன் அதிரடி திருப்பமாக இன்று ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய மாற்றம் செய்துள்ளார். ட்விட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள தனது சுயக்குறிப்பில் காங்கிரஸ் கட்சியின் பெயரைத் தூக்கிவிட்டு, 'கிரிக்கெட் ஆர்வலர், பொது சேவகர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.