மேற்கு வங்கம் - வங்கதேசமிடையே, ஆம்பன் புயல் கடந்த 20ஆம் தேதி கரையை கடந்தது. இதனால், மேற்கு வங்கத்தில், எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சாலைகள் கடும் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள் மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் சரிந்தன. இந்த கொடூர புயலுக்கு 86 பேர் பலியாகினர்.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் கூறும்போது மேற்கு வங்கத்தில் ஆறு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில், 90 விழுக்காடு விவசாய நிலங்கள், தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மேற்கு வங்கத்தில் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. காய்கறி, பழ வகைகள் வரத்து குறைந்துள்ளதால் அவையும் விலை உயர்ந்துள்ளன.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த, அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு உதவ நிதி சேகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.