நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. காஷ்மீர் விவகாரம், தனியார்மயம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்தன. ஹைதராபாத் பாலியல் வழக்குக்கு பின், நாடாளுமன்றத்தின் கவனம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
கோயம்புத்தூரில் 17 வயது மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர், "கோயம்புத்தூரில் 17வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதனை வீடியோவாக எடுத்த கும்பல் அவர்களை மிரட்டியுள்ளனர்.
இந்த சம்வத்திற்கும் மாநில அமைச்சரின் மகன் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் புகார் அளித்த பெண்ணின் பெயரையும் வெளியிட்டனர். அப்போதுதான், மற்ற பெண்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என எண்ணி இதை செய்துள்ளனர். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி வேறுபாடின்றி இதில் செயல்பட வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கென சட்டம் உள்ளது. ஆனால், செயல்படுத்தவில்லை. நொடிக்குநொடி பெண்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்; அதிமுக பொய்களைப் பரப்புவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு!