டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் கடந்த 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்வுக் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று மாணவர்களையும், ஆசிரியர்களையும் பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியது.
இந்தத் தாக்குதலில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட ஏராளாமான மாணவர்களும், ஆசியர்களும் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர், ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் அக்ஷத் அவஷ்தி, ரோஹித் ஷா உள்பட 49 பேரை இன்று விசாரணைக்கு முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜே.என்.யூ. வன்முறைச் சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷத் அவஷ்தி, ரோஹித் ஷா இடம்பெற்றிருந்தனர். காவல் துறையினர் அவர்களைத் தொடர்பு கொண்டபோது விசாரணைக்கு முன்னிலையாகத் தயார் எனக் கூறியுள்ளனர். ஆனால் அவர்களது மொபைன் போன்கள் அணைக்கப்பட்டிருந்தன.
இவர்களைத் தவிர, தௌலத் ராம் கல்லூரியைச் சேர்ந்த கோமல் ஷர்மா என்ற மாணவிக்கும் காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜே.என்.யூ. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான காணொலியில் முகமூடி அணிந்துகொண்டிருந்த பெண் இவர்தான் எனக் கண்டறிந்துள்ளதாகவும், அவருடைய மொபைல் சனிக்கிழமை முதலே அணைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறையினர், பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்கு மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட ஒன்பது பேர் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறினர்.
மின் அஞ்சல், வாட்ஸ்அப் மூலம் இவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.இதுதவிர, 'Unity Against Left' என்ற வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த 60 பேருக்கும் வன்முறைச் சம்பவத்துக்கும் சம்பந்தம் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதில் 37 பேரின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் விசாரணை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ஜே.என்.யு. வன்முறைச் சம்பவம் - விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்