டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களிடம் காவலர்கள் பேரணியை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி முன்னேறி சென்றனர். இதையடுத்து அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து டெல்லி காவல் செய்தித் தொடர்பாளர் மந்தீர் ரந்தவா கூறும்போது, “நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினோம்.
ஆனால் அவர்கள் உடன்படவில்லை. தடியடி நடத்தியதாக எழுப்பப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசிய துணை தலைவர் ஷியாம் ஜாஜூ, “ஜே.என்.யூ. சட்ட விரோத போராட்டங்களால் அறியப்படுகிறது. மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். ஒன்றும் இல்லாத காரணத்திற்கெல்லாம் பிரச்னையை உருவாக்குகிறார்கள். இதுபோன்ற போராட்டங்கள் குறுகிய காலமே நீடிக்கும்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சாதவ் கூறும்போது, நாட்டில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் கல்விக்கு உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. ஆகவே மாணவர்கள் சொல்வதை அரசு கேட்க வேண்டும். மத்திய அரசு கல்விக்கு கூட உரிமை அளிக்காததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு போராடுகின்றனர்” என்றார்.