டெல்லி: ஜேஎன்யூவில் விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி திறக்கவுள்ள வேளையில், அப்பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு துணை வேந்தர் போக்கு குறித்து விமர்சித்து மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஜேஎன்யூ மாணவர்கள் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதுள்ள துணை வேந்தர் ஜக்தீஷ் குமார் மாணவர்கள் நலன் மீது அக்கறையுடன் செயல்படுவதில்லை. விவேகானந்தர் சிலையை நீங்கள் திறக்கக் கூடாது. அதேபோல் நிர்வாக சீர்கேடுக்கு துணை வேந்தரை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நஜீப் அகமது, ரோஹித் வெமுளா ஆகியோர் பெயர்களைக் குறிப்பிட்டு ஜேஎன்யூவில் காணாமல் போன மாணவர்கள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில், குஜராத் கலவரம் பற்றியும் குறிப்பிட்டு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சித்து மாணவர்கள் அமைப்பு சார்பாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவேகானந்தர் சிலையை மோடி திறக்கிறார். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் வடக்கு நுழைவு வாயிலில் மாணவர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.