கரோனா வைரஸ் காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் டீன் சிதீர் பிரதாப் அனுப்பிய சுற்றறிக்கையில், ''மார்ச் மாதத்திலேயே மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தினோம். ஆனால் அந்த நேரத்தில் போக்குவரத்து பிரச்னை உள்ளிட்ட காரணங்களைக் கூறி விடுதியிலேயே தங்குவதற்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறை சார்பாக ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லவுள்ளன. டெல்லியிலும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனால் மாணவர்கள் அனைவரும் விடுதிகளிலிருந்து வெளியேறி, சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும். ஜூன் 25ஆம் தேதிக்குப் பின் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதும் மாணவர்கள் திரும்பி வரலாம். அதுவரை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.