ஐார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒன்று பழங்குடி வேட்பாளருக்கும் மற்றொன்று பட்டியலின வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சில தொகுதிகள் பதற்றத்துக்குரிய தொகுதிகள் என்பதால் பாதுகாப்பு பணியில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடந்துவருவதாக தேர்தல் ஆணையர் வினய் குமார் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 1662 வாக்குச் சாவடிகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இன்று சட்டசபை தேர்தல் நடக்கும் இடங்கள் பஹாரகோரா, காட்ஸிலா (எஸ்.டி), போட்கா (எஸ்.டி), ஜுக்சலை (எஸ்சி), ஜாம்ஷெட்பூர் (கிழக்கு), ஜாம்ஷெட்பூர் (மேற்கு), செராகேலா (எஸ்.டி), சாய்பாசா (எஸ்.டி), மஜ்கான் ( எஸ்.டி), ஜெகநாத்பூர் (எஸ்.டி), மனோகர்பூர் (எஸ்.டி), சக்ரதர்பூர் (எஸ்.டி), கர்சவன் (எஸ்.டி), தாமார் (எஸ்.டி), டோர்பா (எஸ்.டி), குந்தி (எஸ்.டி), மந்தர் (எஸ்.டி), சிசாய் (எஸ்.டி), சிம்டேகா ( எஸ்.டி) மற்றும் கோலேபிரா (எஸ்.டி) ஆகியவை ஆகும்.
முதலமைச்சர் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூரில் களம் காண்கிறார். ஜார்கண்ட் சட்டப்பேரவை சபாநாயகர் தினேஷ் ஓரான் சிசாயிலிருந்து பாஜக டிக்கெட்டில் போட்டியிடுகிறார், பாஜக வேட்பாளரும் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சி அமைச்சருமான நீல்காந்த் சிங் முண்டா குந்தியில் களத்தில் உள்ளார். பாஜக மாநில பிரிவு தலைவர் லக்ஷ்மன் கிலுவா சக்ரதர்பூரில் இருந்து போட்டியிடுகிறார்.