1992-93ஆம் ஆண்டில் பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, மாட்டுத்தீவன கொள்முதலில் ரூ. 950 கோடி ஊழல் செய்ததாகவும், ரூ. 33.67 கோடி சாய்பாசா கருவூலப் பணத்தை மோசடி செய்ததாகவும் அவர் மீது ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் பதியப்பட்டிருந்தன.
நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணையில் லாலு உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்து உடல்நலம் மோசமடைந்த நிலையில் லாலு 2019ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அடிக்கடி, உடல் நிலை பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ராஞ்சி ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ரிம்ஸ்) மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அங்கு லாலுவின் பாதுகாப்பிற்காக காவலர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். இதனிடையே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.