ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விதான் சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஜகர்நாத் மஹ்தோ. 53 வயதான ஜகர்நாத் மஹ்தோ அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சராக உள்ளார்.
கல்வித் துறை அமைச்சராக இருக்கும் ஜகர்நாத் மஹ்தோ 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், எதிர்க்கட்சிகள் அவரது படிப்பை வைத்து தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மஹ்தோ சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் 11ஆம் வகுப்பு பயில விண்ணப்பித்துள்ளார்.
இதற்காக நவாடி பள்ளிக்கு நேரில் சென்ற அமைச்சர், மற்ற மாணவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று பள்ளியில் சேர விண்ணபித்தார். அவர் கலைப் பிரிவை தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கூறுகையில், "நான் எனது படிப்பை மீண்டும் தொடர இதுபோன்ற விமர்சனங்களே ஊக்கமளித்தன. இதுதவிர பள்ளியில் படிக்கும்போதுதான், மாணவர்களின் பிரச்னையை புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் கற்பவர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு சிறந்த கொள்கையை உருவாக்க முடியும்" என்றார்.
மேலும், அமைச்சர் பணியையும் பள்ளிப் படிப்பையும் எவ்வாறு ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியும் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், " "நான் எனது படிப்பையும், அமைச்சர் பணிகளையும் ஒருசேர நிர்வகிப்பேன். இதுபோக விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் நேரம் ஒதுக்குவேன். இதற்காக நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்கூட வேலை செய்வேன். கல்வி கற்க வயது ஒருபோதும் தடையில்லை" என்றார்.
ஜகர்நாத் மஹ்தோ 1995ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின் படிப்பை பாதிலேயே கைவிட்ட அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் விதான் சபா தொகுதியில் போட்டியிட்ட அவர், சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!