இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னணியில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள் ஆகியோருக்கு வைரஸ் தொற்று கடந்த சில நாள்களாக உறுதிசெய்யப்பட்டு-வருகின்றன.
இந்நிலையில் பெருநகர மும்பை மாநகராட்சி சார்பில் ஆசாத் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 171 பேருக்கு நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 53 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
செய்தியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் குறிப்பாக புகைப்படக் கலைஞர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்து செய்தியாளர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து ஊடக நிறுவனங்களும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் பாதுகாப்பாக உணர்கிறோம் - இத்தாலியர் பாராட்டு!