ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், தெர்மோகோல் ஆகியவைதான் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கழிவு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க அரசு பல்வேறு யுக்திகளைக் கையாண்டுவருகிறது. அதற்குத் துணையாக ஜார்கண்ட் மாநிலம் ஜுக்சலை நகராட்சி நிர்வாகமும் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
37 சுய உதவிக்குழுக்களின் உதவியுடன் ஜுக்சலை நகராட்சி நிர்வாகம் பாத்திர வங்கியை தொடங்கியுள்ளது. பாத்திர வங்கியின் முலம் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகியவைக்கு பாத்திரங்கள் மிகக் குறைந்த விலையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஜுக்சலை நகராட்சி நிர்வாகத்தின் சிறப்பு அலுவலர் ஜே.பி. யாதவ், "பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில் பாத்திர வங்கி தொடங்கப்பட்டுள்ளது. தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வரும் காலங்களில் நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் பாத்திர வங்கி! பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஜுக்சலை நகராட்சி மன்றத்தின் மேலாளர் க்ளெனிஷ் மின்ஸ் கூறுகையில், "37 சுய உதவிக்குழுக்களை உருவாக்கி பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை குறித்து பரப்புரை செய்துவருகிறோம். இந்தத் தனித்துவமான பாத்திர வங்கி பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், பெண்களுக்கு வருமானத்தையும் அளிக்கிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக மாறினால், பெரியளவில் பாத்திர வங்கியை தொடங்குவோம்" என்றார். சைவ, அசைவ உணவு விரும்பிகளுக்கு ஏற்ப வங்கியில் தனித்தனியாக பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பாத்திர வங்கி குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர் சுமன் குமாரி கூறுகையில், "பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்த வங்கி பெரிதும் உதவுகிறது. ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உணவு சுவையாக இருக்கிறது. இந்த முயற்சியால் பெண்கள் வருமானம் பெறுகின்றனர். ஜுக்சலை நகராட்சி நிர்வாகம் அவர்களது தொலைபேசி எண்னை வெளியிட்டுள்ளதுடன், அவர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கு வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களை தொடர்பும் கொள்கிறது" என்றார்.
இதையும் படிங்க: மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!