ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆரா, கெரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பல பாராட்டுகளை தக்கவைக்க முயற்சிகளை இந்த கிராமங்கள் மேற்கொண்டுவருகிறன. இந்த முன்மாதிரியான முயற்சிக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்தார். ஒர்மன்ஜி தொகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆரா, கெரம் ஆகிய இரு பஞ்சாயத்துகள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராக ஒரு மாபெரும் இயக்கத்தை தொடங்கி நடத்திவருகிறது.
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பிளாஸ்டிக்குக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றனர். விதிமுறையை மீறுபவர்களுக்கு பஞ்சாயத்து அபராதம் விதிக்கிறது. இதுகுறித்து ஆரா கிராமத் தலைவர் கோபால் பேடியா கூறுகையில், "ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் கிராம பஞ்சாயத்தின் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இதுபோன்ற ஒரு கூட்டத்தில்தான், பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்க முடிவு செய்தோம். அதையும் மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் நாங்கள் அவர்களுக்கு ரூ.150 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கின்றோம்" என்றார்.
பஞ்சாயத்து எடுத்த இந்த முயற்சிக்கு இரு கிராமங்களிலும் ஆதரவு கிடைத்தது. மளிகை கடைக்கு சென்று பொருள்கள் வாங்கும்போது பிளாஸ்டிக்கை கைவிட்டு துணிப் பைகளை பயன்படுத்துகிறார்களா என பஞ்சாயத்து கண்காணிக்கிறது.