உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், மசூதி கட்டுவதற்கு மற்றொரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கித்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, அயோத்தி மாவட்டத்தில் சோஹாவால் வட்டம், தான்னிபூர் கிராமத்தில் லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கியது.
இந்நிலையில், இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் சார்பில் அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் கட்டப்படவுள்ள மசூதிக்கான ஆலோசகராக ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜே.எம்.ஐ) பல்கலைக்கழக கட்டடக்கலை பேராசிரியர் எஸ்.எம்.அக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்தார் கூறுகையில், "1,000க்கும் மேற்பட்ட கட்டடக் கலைஞர்களாக எனது மாணவர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இத்திட்டத்திற்காக அவர்கள் என்னுடன் இணைந்து பணியாற்றலாம். மேலும், அதே போல், கல்லூரியில் பயிலும் தற்போதைய மாணவர்களுக்கு சிறந்த அனுபவமாக இத்திட்டம் இருக்கக்கூடும். கரோனா தொற்றால் தற்போது அயோத்திக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், இதற்கு முன்னர் அயோத்தி சென்றுள்ளேன். நன்கு பரிச்சயமான இடம் அது" எனத் தெரிவித்தார்.
இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கணினி மையம், மருத்துவமனை மற்றும் கட்டடக்கலைக் கட்டடம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். மேலும், உள்ளூர் பகுதி திட்டங்களை வகுப்பதற்காக டெல்லி அரசாங்கத்துடன் இணைந்து அக்தார் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.